முல்லைத்தீவில் 3,389 குடும்பங்களுக்கு வாழ காணி இல்லை ; பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 குடும்பங்களுக்கு வாழ்வதற்குரிய காணி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இறுதியாக நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது, குறித்த பிரதேசத்திலும் 700 குடும்பங்கள் காணிகள் இன்றி வாழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய காணிகள் பெற்றுக் கொடுக்கப்படாவிடின், பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அதிகாரிகளிடம், நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
விடயங்களைக் கேட்டறிந்த கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான காணி கச்சேரிக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்களுக்கான காணிகள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.