பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மேற்கொள்கின்ற தேவையற்ற தலையீடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், வரும் வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
துணைவேந்தர்கள் நியமனத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் தலையீடுகள் புதிய சட்டத்தின் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளர், மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க, குறிப்பிட்டார்.
எனினும், அந்தச் சட்டத்தில் உள்ள சில விதிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்கள் எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கப்படக் கூடிய அளவுக்கு நிர்வாக சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வரையற்ற அதிகாரம், கடுமையான நிர்வாகச் சிக்கலை உருவாக்குவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் சாதகமான தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் வழங்கிய அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் மேற்கொண்ட தலையீடுகளால் காலவரையற்ற முறையில் தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக அமைப்பின் சுயாதீனத்தை பாதுகாப்பதற்காக வரும் வாரம் முதல் தொடர்ச்சியான போராட்டத்திற்கு தயாராக உள்ளதாக சாருதத்த இலங்கசிங்க மேலும் தெரிவித்தார்.