2021 சிம்மம்,கன்னி,துலாம் மற்றும் விருச்சக ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்
குருபெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு பலன்களை வழங்கும். அதன் படி தற்போது 2021- 2022 ஆம் ஆண்டு ஒவ்வொரு ரசிகளுக்குமான முழு குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.
சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
எப்போதும் முதன்மையையே விரும்பும் சிம்மராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மகரத்தில் அமர்ந்து ஏராளமான தொல்லைகளைக் கொடுத்துவந்த குருபகவான் 13.11.2021 அன்று ஏழாம் வீட்டுக்கு நகர்வது மகிழ்ச்சியான செய்தியாகும். மனம் தெளிவாகும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குருபகவான் நேர் பார்வையால் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறார். இனி உங்கள் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரிவு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த சிம்ம ராசிக்காரர்களுக்கு சத்புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய வீடுவாங்கும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். நீண்ட காலத்துக்குப் பின் விரும்பிய ஊர்களுக்குச் சென்று ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.
குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் இனி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். சகோதர உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். அவர்களோடு இருந்த வருத்தங்கள் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவுவார்கள். பேச்சில் இனிமை பிறக்கும்.
உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பதவிகள் கிடைக்கும். ஊரில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திருவிழாக்களில் மாலை மரியாதைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், இதுவரை இருந்த நிலைமை மாறித் தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழி விலகும்.
குருபகவானின் சஞ்சார பலன்கள்:
13.11.2021 முதல் 30.12.2021 வரை
குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் வசதிகள் கூடும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உரிய வங்கிக் கடன் கிடைக்கும். பழைய சொத்துகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கடன் பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்ப்பீர்கள். தாயாரின் உடல் நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கும். உறவுகளோடு இருந்த மனஸ்தாபம் விலகும்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை
குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் ஏற்படும். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகும்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை
குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சொத்து வாங்குவது வாங்குவது விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். அதிகப்படியான செலவுகளும் ஏற்படலாம்.. கர்ப்பிணிகள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்தக் காலகட்டத்தில் உறவுகளிடையே கொஞ்சம் அனுசரணையோடு நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற சிக்கல்கள் தோன்றும். திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படலாம். பயணத்தின் போது உரிய பாதுகாப்பைப் பின்பற்றுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனக் குறைவில்லாமல் பயணிக்க வேண்டியது அவசியம்.
வியாபாரிகளுக்கு:
லாபம் இல்லாமல் முடங்கிக் கிடந்த வியாபாரத்தைப் புத்துயிர் கொள்ளச் செய்வீர்கள். உங்கள் அனுபவமும் தனித்தன்மையும் கைகொடுக்கும். அடுத்த ஆங்கில ஆண்டுத்தொடக்கத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். புதிய திறமையான வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு சம்பந்தமான தொழில்கள் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய உரிமம் அனுமதி ஆகியன கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
வேலைபார்க்கும் இடத்தில் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்க வில்லையே என்று கவலைப்பட்டீர்களே, இதோ உங்களுக்கான நேரம் வந்துவிட்டது. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். மேல் நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பழையபடி அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
கலைஞர்களே! உங்கள் திறமையை நீங்களே உணர்ந்து வெளிக்கொண்டுவருவீர்கள். அதற்கு உதவும் வகையில் நல்ல நிறுவனம் அமையும். அரசாங்க கௌரவம் விருது தேடிவரும்.
மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடும் காலகட்டமாகவும் மன அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை வழிபட்டுவரவும்.
கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்
கலகலப்பான பேச்சால் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் கன்னி ராசி அன்பர்களே... இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களை உங்களுக்குத் தரும் என்பதைப் பார்ப்போம்.
இதுவரை உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிவந்த குருபகவான் இப்போது ஆறாம் வீடான கும்பத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆறாம் வீடு என்பது அத்தனை உகந்த இடம் அல்ல. நற்பலன்கள் கிடைக்காது என்று கவலைப் படுகிறீர்களா... சகட குரு சங்கடங்கள் தருவார் என்று வருந்துகிறீர்களா... அந்த வருத்தமே தேவையில்லை. குருபகவான் தன் பார்வை பலத்தால் சில அதிர்ஷடங்களையும் உங்களுக்கு வாரி வழங்குவார்.
குருபகவான் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்குஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் உங்களின் 10 ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும்.
குருபகவானின் பார்வை சிம்மராசியின் மீது படுவதால் வீண் செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்துவார். மகன் கல்விக்காகச் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விட்டுப்போன பணிகளை எடுத்துச் செய்யும் நிலை வரும்.
குருபகவானின் சஞ்சார பலன்கள்:
13.11.2021 முதல் 30.12.2021 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற கோபம், செலவு ஆகியன ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோகியத்திலும் அக்கறை செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போதும் உரிய கவனம் தேவை.
31.12.2021 முதல் 02.03.2022 வரை
குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பரம்பரை சொத்தை விற்கும் நிலை ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
02.03.2022 முதல் 13.04.2022 வரை
குருபகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத்துணையோடு அனுசரித்துச் செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் சண்டைக்குச் செல்லாதீர்கள். யாரிடமும் அவர்களை விட்டுக்கொடுத்துப் பேச வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். காதுபடவே சிலர் உங்களைக் குறித்து அவதூறு பேசுவார்கள். அதை எல்லாம் கண்டும் காணாமலும் விடுங்கள். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். பணியிடத்தில் இடமாற்றம் இருந்துகொண்டேயிருக்கும்.
வியாபாரிகளுக்கு :
புதிய முதலீடுகளுக்கான நேரம் இதுவல்ல என்பதை உணருங்கள். பணியாள்கள் தேவையில்லாமல் தொந்தரவு கொடுப்பார்கள். போட்டிகள் அதிகரிக்கும். அதனால் லாபம் குறைவாகவே வரும். வரவேண்டிய நிலுவையை வசூலிக்க ஒருமுறைக்கு இருமுறை அலைய வேண்டிவரும். என்றாலும் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். யார் எவ்வளவு சொன்னாலும் தெரியாத வணிகத்தைத் தொடங்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் மேலதிகாரிகள் உங்களை மனம் திறந்து பாராட்டுவார்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் பலன் தரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் உற்சாகமாகவே காணப்படுவார்கள்.
கலைஞர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.
துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கலைகளில் ஆர்வமும் காரியத்தில் கருத்தும் கொண்ட துலாராசி அன்பர்களே
இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் நான்காம வீடான மகரத்தில் அமர்ந்து உங்களை சங்கடப் படுத்திக்கொண்டிருந்தார் குருபகவான். எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடினீர்கள். பல வகைகளிலும் தடை தாமதம் என்று இருந்த நிலை தற்போது மாறப்போகிறது. 13.11.2021 அன்று குருபகவான் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5 ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். ஊருக்காக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஒருவருக்குள் ஒருவர் அந்நியோன்யமும் அன்பும் இன்றி இருந்த நிலை மாறும். கணவன் மனைவியருக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பல காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த துலாராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் தேரும். செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு மரியாதை அமர்க்களப்படும்.
உங்கள் அணுகுமுறையே இனி மாறும். ரசனை அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனைச் செய்து மன நிம்மதி பெறுவீர்கல். சொத்துப் பிரச்னைகள் தீரும்.
குருவின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுவதால் உங்களின் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். 9 ம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் தீரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்களின் 11 ம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்வையிடுவதால் சகோதர உறவுகளுடன் இருந்த வருத்தங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். உறக்கம் வராமல் தவித்த துலாராசி அன்பர்கள் இனி நன்கு உறங்குவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். அரசியல்வாதிகள் ஆட்டம் கண்ட தங்களின் பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.
குருபகவானின் சஞ்சார பலன்கள்:
13.11.2021 முதல் 30.12.2021 வரை
குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுக்குக் குறை இருக்காது. பேச்சில் அனுபவம் பளிச்சிடும். இதனால் சகலரின் அன்பையும் பெறுவீர்கள். வழக்குகளில் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மட்டும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை
சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உணவு விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். உங்களுக்கு செரிமானம் ஆகும் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள் இல்லை என்றால் கோளாறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையோடு மோதல்போக்கைக் கைவிடுங்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை
குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். சிலர் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுவீர்கள். மதிப்பு மிக்க விஷயங்களைக் கையாளும் போது கவனம் தேவை. அலட்சியம் இல்லாமல் பணியாற்ற வேண்டியது அவசியம் என்றாலும் செல்வம் செல்வாக்கு அதிகரித்த வண்ணமே இருக்கும்.
வியாபாரிகளுக்கு:
போட்டிகளால் முடிங்கிக் கிடந்த வியாபாரத்தை மீண்டும் சீர்செய்வீர்கள். உங்கள் தொழில் அணுகுமுறை முற்றிலும் மாறும். அடுத்த ஆங்கில ஆண்டின் தொடக்கத்தில் புதிய முதலீடுகளைச் செய்வது நன்மை பயக்கும். விட்டுப்போன வாடிக்கையாளர்கள் தேடிவந்து வணிகம் செய்வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும்.
கம்பியூட்டர், உணவு, தரவு வகை வணிகங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெறும். பங்குதாரர்கள் உங்கள் மனம்போல் நடந்துகொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை நீங்கும் அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். இதுவரை அதிகரித்துவந்த பணிச்சுமை இனி குறையும். மேலதிகாரிகள் இனி குறை சொல்ல மாட்டார்கள். நல்ல சூழல் அலுவலகத்தில் இருக்கும். பதவி உயர்வுகள் தேடிவரும். தகவல் தொழில் நுட்பத்துரையில் பணியாற்றும் அன்பர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களே! மறைந்திருந்த தகுதியை வெளிப்படுத்துவீர்கள். நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.
மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் சிக்கி சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
நல்லதோ கெட்டதோ அதை மனதில் போட்டு மறைக்காமல் எல்லோரிடமும் நேருக்கு நேராகச் சொல்லிவிடும் நல்ல உள்ளம் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே!
இதுவரை மூன்றாம் இடத்தில் அமர்ந்து பலவிதமான தடைகளைக் கொடுத்து உங்களைச் செயல்பட விடாமல் பார்த்துக்கொண்ட குருபகவான் இப்போது நான்காம் வீட்டுக்குச் செல்கிறார். நான்காம் இடம் என்பதும் குருபகவானின் சஞ்சாரத்தில் அனுகூலமான பலன்தரும் இடம் அல்ல என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்தான் என்றாலும் குருபகவான் ஸ்தான பலத்தை விடப் பார்வை பலம் அதிகம் என்பதால் அவ்வப்போது நல்ல பலன்களும் ஏற்படும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்குரிய குரு பகவான் தன் நட்சத்திரமுள்ள வீட்டில் அமர்வதால் இனி கெடுபலன்கள் குறையும். என்றாலும் எப்போதும் பணிச்சுமையும் அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை அவசியம். முடிவு எடுக்கும்போது உணர்வு பூர்வமாக எடுக்காமல் அறிவுபூர்வமாக எடுக்க வேண்டியது அவசியம். தாயார் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அவரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் ஈகோ பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவது எதிர்காலத்துக்கு நல்லது.
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்ளின் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். உயர் கல்வி - உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் மிகவும் கட்டுபாடு தேவை. அதிகமாகவே அல்லது நேரந்தவறியோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.
10 ம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய காலம் இது. எனவே எதற்கெடுத்தாலும் போலீஸ், கேஸ், கோர்ட் என்று செல்ல முயல வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 12 ம் இடமான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் இனி செய்யும் செலவுகளில் அதிகம் சுப செலவுகளாக இருக்கும். ஆன்மிக காரியங்களுக்கு செலவிடுவீர்கள். தினமுமே யோகா, தியானம் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுவெளியில் பேசும்போது வரம்பு மீறி விமர்சனம் செய்ய வேண்டாம். எல்லோரையும் கொஞ்சம் அரவணைத்துப் போங்கள்.
குருபகவானின் சஞ்சார பலன்கள்:
13.11.2021 முதல் 30.12.2021 வரை
அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். இளமையாக உணர்வீர்கள். பேச்சில் இதுவரை இருந்த பயம் விலகி கம்பீரம் தொனிக்கும். குடும்பத்தின் வருமானம் கணிசமாக உயரும். மழலை வரம் வேண்டும் தம்பதிக்கு இந்தக் காலகட்டத்தில் அதற்கான பலன் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலன் கொடுக்கும். சகோதர உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனதில் வலிமை கூடும். திருமண முயற்சிகள் கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்களுக்கான மாலை மரியாதை தவறாமல் கிடைக்கும். வேற்றுமதத்தவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். புதுப்பிக்காமல் இருந்த பிதுர்ராஜ்ஜிய சொத்தைப் புனரமைப்பீர்கள். வேலை தேடும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அயல்நாடு செல்லும் முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை
குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்யும் இக்காலக்கட்டத்தில் எதிலும் வெற்றியே கிட்டும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து உயர்கல்வி, உத்தியோகம் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கூடி வரும்.
வியாபாரிகளுக்கு:
தொழிலை விரிவுபடுத்தலாம். லாபத்துக்குக் குறைவில்லை. பணியாளர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அதேவேளையில் அவர்களிடம் அனைத்தையும் சொல்லிவிடாதீர்கள். விட்டுப்போன வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களை அறிவிப்பீர்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களிடம் கராராகப் பேச வேண்டாம். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். சக ஊழியர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மோதல் போக்கைக் கைவிடுங்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகலாம்.
குருபகவான் 10 ம் வீட்டை பார்ப்பதால் இந்த சவால்களை எல்லாம் சமாளிப்பீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தடைபட்டு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தரும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.