வாசனை பிடிக்கவில்லை; இந்திய உணவு வெறுப்பால் 200,000 டொலர் இழப்பீடு !
அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இந்திய உணவான பாலக் பன்னீர் வாசனையால் இரண்டு இந்திய மாணவர்கள், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 200,000 டொலர் (சுமார் 1.6 கோடி இந்திய ரூபாய்) இழப்பீட்டைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் உணவு ரீதியான பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

முனைவர் பட்ட மாணவர் ஆதித்யா பிரகாஷ், பல்கலைக்கழக ஆய்வகத்தில் இருந்த மைக்ரோவேவ் அடுப்பில் தனது மதிய உணவான பாலக் பன்னீரைச் சூடுபடுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் ஊழியர் ஆட்சேபனை
அப்போது அங்கிருந்த பிரிட்டிஷ் ஊழியர் ஒருவர், அந்த உணவின் வாசனை மிகவும் காரமானது என்று ஆட்சேபனை தெரிவித்தார். அத்துடன், அங்கு இந்திய உணவுகளைச் சூடுபடுத்தக் கூடாது என எழுத்துப்பூர்வமாக இல்லாத விதியைக் கூறித் தடுத்துள்ளார்.
எந்த உணவுகள் அனுமதிக்கப்படும் என்று ஆதித்யா கேட்டபோது, சாண்ட்விச்கள் வாசனை உடையவை அல்ல, ஆனால் கறி வகைகள் அவ்வாறானவை என்று அந்த ஊழியர் பதிலளித்துள்ளார்.
இது திட்டமிட்டு இந்திய உணவுப் பழக்கத்தை இலக்கு வைத்த செயல் என குற்றம் சாட்டப்பட்டது.
தொடர்ச்சியான கிண்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்ட ஆதித்யாவும், அவரது வருங்கால மனைவி ஊர்மி பட்டாச்சார்யாவும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக சிவில் உரிமை வழக்கைத் தொடர்ந்தனர்.
செப்டம்பர் 2025 இல் பல்கலைக்கழகம் மாணவர்களுடன் உடன்பாட்டிற்கு வந்து, 200,000 டொலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது.
தாங்கள் தவறு செய்யவில்லை என்று மறுத்த போதிலும், வழக்கைத் தீர்க்கவே இந்தத் தொகையை வழங்குவதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.