20 கோடி போதைப்பொருள் ; நான்கு இலங்கை பயணிகள் கைது;இருவர் பெண்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த போதைப்பொருள் தொகையும் இதன்போது அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

இருவர் பெண்கள்
சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், இவர்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளில் 20 பொதிகளாக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் 684 கிராம் 'குஷ்' போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரும் கைப்பற்றப்பட்ட 'குஷ்' போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.