இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் வரலாற்று சாதனை வருமானம்!
வாகன இறக்குமதியால் , இலங்கைச் சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தைச் சேகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த வருமானமானது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட அதிகமானது என்று சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட இலக்கை தாண்டி வருமானம்
2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சு முதலில் 2,115 பில்லியன் ரூபாயை இலக்காக நிர்ணயித்திருந்தது. இதன்படி நவம்பர் மாதத்திலேயே ஆரம்ப இலக்கை சுங்கம் எட்டியதால், அது 2,231 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து சுங்கத் திணைக்களம் தற்போது இந்தத் திருத்தப்பட்ட இலக்கையும் தாண்டி 2,497 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.
அதேவேளை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டமை இந்த அதிரடி வருமான உயர்விற்கு முதன்மைக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுங்கத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்ட புதிய வரி வசூலிப்பு முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பனவும் வருமான உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.