ஒரு கணவன் இரு மனைவிகள்; சடலைத்தை பெற மருத்துவனையில் பெண்கள் குடுமிப் பிடி சண்டை
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் முதன் மனைவியும் , இரண்டாவது மனைவியும் குடுமி பிடி சண்டைப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம்
மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.
இரண்டாவது பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் இருந்தபோதிலும், உயிரிழந்த நபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 30ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரண விசாரணை கடந்த 31ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.
அதேசமயம் கடந்த 20 வருடங்களாகத் தன்னுடனேயே அவர் வாழ்ந்ததாகக் கூறி, இரண்டாவது மனைவியும் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து சடலத்திற்கு உரிமை கோரினார்.
இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.
இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது என கூறி சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு எனவும் கூறி முதல் மனைவியிடமே சடலம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.