வெளிநாட்டவரை நம்பி தனக்கு தானே ஆப்படித்த இலங்கை அரசியல்வாதி !
தங்கம் வழங்குவதாக பொய்யாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்த குற்றச்சாட்டில் நாட்டில் 11 கானா நாட்டவர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கானா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர்களுடன் தங்கம் என சந்தேகிக்கப்படும் மஞ்சள் உலோகத்தையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தால் ஏமாந்த ஹிஸ்புல்லா
நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் தலைநகர் அக்ரா அருகே உள்ள ஒரு பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
தங்கத்தை விற்பனை செய்வதாகக் கூறி 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து பணம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்ற பிறகு, சந்தேக நபர்கள் தங்கத்தை வழங்கத் தவறிவிட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினருடனான உறவைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

கானா அரசாங்கம் நிறைவேற்றிய சட்டம்
இருப்பினும், தொடர்பை மீண்டும் ஏற்படுத்திய பிறகு 50 கிலோகிராம் தங்கத்தை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
2023 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாக கூறி இந்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைநகரைச் சுற்றி இயங்கும் தங்கக் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொய்யான சாக்குப்போக்கு மூலம் மோசடி செய்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை 2025 ஏப்ரல் முதல் கானா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தங்க வாரியச் சட்டத்தின்படி, வெளிநாட்டினர் நாட்டின் சந்தையில் இருந்து தங்கம் வாங்க அனுமதிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது,
மேலும் தங்கம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் கானா அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.