2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த திட்டம்; ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
திருகோணமலை மாவட்ட கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை மக்கள் இன்று முற்றுகையிட்டிருந்தனர்.
தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் குறித்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றி, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக இதில் கவனம் செலுத்தி, பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தியிருந்தனர்.