2.5 மில்லியன் மோசடி விவகாரம் ; சபாநாயகர் கடும் எச்சரிக்கை
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த எதிர்க்கட்சி முன்வைத்த வலியுறுத்தலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகையில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட வழிபாட்டில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிதி மோசடி விவகாரம்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தினார்.

நாட்டின் பொதுச்சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது. சட்டத்துக்கு கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும்.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் கோரிய விவாதத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதால் மூன்றாம் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அதற்குரிய திகதி நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஒதுக்கப்படும் என்றார்.