யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர்.
அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.