தமிழர் பகுதியில் 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் ; அதிகாரிகள் அதிரடி
கிளிநொச்சி, தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் ஏ-35 பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதிச் சோதனையின்போது, வீதி ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டில் 15 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின்போது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனம் பறிமுதல்
அதே தினம் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அனுமதிப்பத்திரமற்ற உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், வேறொரு பகுதிக்கான மணல் அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் டிப்பர் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.