ஜானக ரத்நாயக்கவை கொலை செய்யாதிருக்க 15 இலட்சம் கப்பம்!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான கோடீஸ்வரர் ஜானக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் குழு ஒன்று 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் பதுங்கி வாழும் புளூமண்டல் சங்காவே இந்தக் கப்பத்தை கோரியதாக தெரிய வந்துள்ளது.
அழைப்பில் கப்பம் கோரிய புளூமண்டல் சங்கா
நேற்றுத திங்கட்கிழமை (16) காலை 7.10 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் புளூமண்டல் சங்கா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், 'தங்களைக் கொலை செய்வதற்காக 80 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் ஒன்று தன்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாதிருக்க தனக்கு 15 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது என ஜானக ரத்நாயக்கவிடம் கூறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த அழைப்பின் பிரகாரம் முறைப்பாட்டாளரான ஜனக ரத்நாயக்க தனது அலுவலகத்தில் உள்ள பணத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை தன்னை அழைத்த நபரிடம் ஒப்படைக்குமாறு பணியாளருக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.