இலங்கையில் கழிப்பறை வசதி அற்ற 13,326 குடும்பங்கள்
இலங்கையில் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதி அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் பதிலாகக் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளைப் பயன்படுத்துவதாக புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார சவால்
2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு (Population and Housing Census) அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, நாட்டிலுள்ள 61,11,315 குடும்ப அலகுகளில் 0.2 வீதமானவை (13,326 குடும்பங்கள்), இன்னும் கழிப்பறை வசதியின்றி வாழ்ந்து வருகின்றன.
அத்துடன் 92.2 வீதமான குடும்பங்கள் தனிப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகவும், 5.8 வீதமான குடும்பங்கள் ஏனைய குடும்பங்களுடன் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 0.2% குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளை நம்பியுள்ளதுடன், 0.2% குடும்பங்கள் திறந்த வெளி இடங்களைப் பயன்படுத்துகின்றன. பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் அதிகபட்ச எண்ணிக்கையைக் கொழும்பு மாவட்டம் பதிவு செய்துள்ளது.
இதன்படி கொழும்பில் சுமார் 4,518 குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன. அதே சமயம், அந்த மாவட்டத்தில் 207 குடும்பங்களுக்கு எந்தவிதக் கழிப்பறை வசதியும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கழிப்பறைகளைப் பகிர்ந்துகொள்வதில் நுவரெலியா மாவட்டம் அதிக விகிதத்தை (5.2%) கொண்டுள்ள அதேவேளை இது பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சுகாதார சவால்களைப் பிரதிபலிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.