யாழில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன்; உறவுகள் கூறுவது உண்மையா!
வயல் அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த இளைஞனின் சித்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது வாகனத்தினை ஓட்டி சென்ற 17 வயதான இளைஞன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

பொலிஸாருக்கு கையூட்டு
இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , இளைஞனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனை தொழிலாக செய்து வந்தார் எனவும் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி சாரதி அனுமதி பத்திரம் இன்றி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணையில் வேலையாட்களை ஏற்றுவதற்காக சென்ற போது தன்னிடம் பணம் இல்லாததால் தான் பொலிஸார் மறித்த போது நிறுத்தாமல் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் பொதே பெறாமகனை பொலிஸார் சுட்டுள்ளனர் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, அவருடன் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் நெருங்கிய உறவினர்களே எனவும் குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதில் அவர் உழைக்க சென்றதாகவும் அவரை அநியாயமாக சுட்டு கொன்று விட்டார்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிசாரின் கட்டளையை மீறி சென்றதாக தெரிவித்து ஹயஸ் ரக வாகனம் ஒன்றின்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.