இணையவழி நிதி மோசடியில் 126 சீன பிரஜைகள் கைது
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 126 சீன பிரஜைகளை இன்று (12) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி - குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கு தெரிந்தே, சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் ஹோட்டலின் தனிப் பகுதியை முன்பதிவு செய்து இவ்வாறு இணைவழி நிதி மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டமிட்டு பாரிய அளவில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் பலர் சிக்கியுள்ளனர்.
இந்த பின்னணியில் இணைய மோசடியில் ஈடுபட்ட மேலும் 126 சீன பிரஜைகள் கண்டி குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி அருண ஜயசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கண்டி பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் இணைந்து மேற்படி அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 17 சீன யுவதிகளும் அடங்குவர்.
எவ்வாறாயினும், சோதனையின் போது, மேலும் பல சீனர்கள் அந்த ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள மகாவலி கங்கை ஊடாக தப்பி ஓடிவிட்டனர்.
சோதனையிடப்பட்ட இடத்தில் இருந்து 120 மடிக்கணினிகள், 14 கணினிகள் மற்றும் 300இற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் கடந்த செப்டம்பர் 30 அன்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு வந்து 47 அறைகளை முன்பதிவு செய்ததோடு, பிரதான விருந்து கூடம், சாப்பாட்டு அறை மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றுக்குள் ஹோட்டல் ஊழியர்களோ வெளியாட்களோ நுழைய முடியாத வகை தடை செய்யப்பட்ட பகுதியாக பயன்படுத்தினர்.
ஹோட்டல் நிர்வாகம் தெரிந்தே இணையவழி நிதி மோசடி இடம்பெற்றதாகவும், இரு தரப்பினருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு சீன மொழி பெயர்ப்பாளரையும் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
8 நாட்களுக்கு ஒருமுறை ஹோட்டல் கட்டணம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சீனர்கள் முதல் 8 நாட்களுக்கு உணவு மற்றும் பானங்களுக்காக மாத்திரம் 46 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளனர்.
இன்றைய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களில் அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இதேபோன்றதொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற 26 சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.