3 வாகனங்கள் மோதி 11 பேர் காயம்
பண்டாரகம-களுத்துறை வீதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரந்துடுவவிலிருந்து பயணித்த லொறி பண்டாரகமவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடந்து லொறியுடன் மோதியது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள்
லொறி ஓட்டுநர் பிரேக் போட்டதால் லொறியின் பின்னால் வந்த வேன் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நடனக் குழுவைச் சேர்ந்த பத்து பேர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஏழு பேர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தைத் தொடர்ந்து லொறியின் சாரதி அப்பகுதி மக்களால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வேனில் பயணித்த நடனக்குழு வஸ்கடுவ, பொதுப்பிட்டியிலிருந்து சிலாபத்திற்கு பெரஹெர ஒன்றுக்கு சென்றுக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கிளினிக் வந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.