11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 45 வயது நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை
தனது பாடசாலை நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது 11 வயது மகனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 45 வயதுடைய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
இதன்போது, குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், குற்றவாளி மேலதிகமாக ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின்படி, குறித்த நபர் தனது பாடசாலை நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பங்களில், சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது பலமுறை அவனது அந்தரங்க உறுப்பைத் தொட்டுப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.