தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்!
தகவல் அறியும் சட்டத்தில் முன்னாள் காதலி தொடர்பில் இளைஞர் ஒருவர், 1,886 கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில் அங்குள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.
சந்தோஷின் நடத்தை காரணமாக அந்த பெண் அவரிடமிருந்து விலகி சென்ற நிலையில், , செல்போன், கடிதம் மூலம் சந்தோஷ் தொந்தரவு செய்து வந்ததால், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிகிறது.

மனநல ஆலோசனை வழங்க உத்தரவு
இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலி தற்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவர் உயிரோடு இருக்கிறாரா? என்பன உள்ளிட்ட 1,886 கேள்விகளை எழுப்பி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள, பொது தகவல் அதிகாரிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 97 விண்ணப்பங்களை சந்தோஷ் அனுப்பியுள்ளார்.
இந்த தகவல்களை வழங்கவில்லை என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக சந்தோஷ், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் வகையிலும், எந்த பொதுநலனும் இல்லாமல் மனுதாரர் செயல்பட்டுள்ளார்.
ஊழல்களையும், முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை, தனது தனிப்பட்ட காதலில் ஏற்பட்ட விரக்திக்காக தவறாக பயன்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்று முறையற்ற மனுக்களை தாக்கல் செய்து அரசுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அவர் ஆர்டிஐயில் மனு தாக்கல் செய்ய ஓராண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து, சந்தோஷுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.