உலக வரலாற்றில் இதுவே முதல்முறை: உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்
உலக வரலாற்றில் முதல்முறையாக சொந்த அமைச்சரவை முடிவை சவாலுக்கு உட்படுத்தி 3 அமைச்சர்கள் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
யுகதனவி அனல் மின் நிலையம் விவகாரம் குறித்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் காணப்படும் வேறுபட்ட கருத்துகளை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம். உலக வரலாற்றில் முதல்முறையாக சொந்த அமைச்சரவை முடிவை சவாலுக்கு உட்படுத்தி மூன்று அமைச்சர்கள் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர்.
நாங்கள் 16 அரசியல் கட்சிகளின் கூட்டணி. தேசிய கொள்கை கட்டமைப்பில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம், மற்ற எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது கூட்டணி அரசாங்கத்திற்குள் எப்பொழுதும் காணப்படும் இயற்கையான விடயமாகும்.
இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமே இந்த உலகத்திலேயே காணப்படும் மிகச் சிறிய அமைப்பாகும்.
இந்தச் சிறிய அமைப்பிலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படும் நிலையில், ஆளும் கூட்டணி போன்ற சிக்கலான மற்றும் வெகுஜன அமைப்பில் ஒவ்வொரு பிரச்சினையிலும் எவ்வாறு ஒற்றுமையை எதிர்பார்க்க முடியும் என் தெரிவித்துள்ளார்.