திருகோணமலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் வந்தமர்ந்த புத்தர்!
திருகோணமலை கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று பிற்பகல் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.
புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கடற்கரையில் நேற்று (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
சபையிலும் அமைதியின்மை
அத்துடன் புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, திங்கட்கிழமை (17) பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் அறிவித்தார்.
சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


