ரணிலின் கைது குறித்து யூடியூபர் கணித்தது எப்படி ; எதிர்க்கட்சி தலைவர் சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்று யூடியூப் சமூக வலைத்தளக் கணக்கை கொண்ட ஒருவர் எவ்வாறு முன்கூட்டியே உறுதியாகக் கூறினார்? அவரது இந்த கணிப்பு நிச்சயம் தற்செயலான ஒரு கணிப்பாக இருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்செயல் நிகழ்வல்ல
அவர் தனது பதிவில், குறித்த யூடியூப் சமூக வலைத்தள நபரின் கணிப்பு தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பதை நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது எவ்வாறு? இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா? அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும்.' என எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்தது.
இந்நிலையில் இது தொடர்பில் நடிகரும் யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வியெழுப்பியிருந்தார்.
அத்தோடு முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். 'ஒரு யூடியூபர் கணித்தபடி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், பழிவாங்கும் மற்றும் அழிவுகரமான அரசியலின் தொந்தரவான போக்கை பிரதிபலிக்கின்றன. இந்த சுழற்சி முடிவுக்கு வர வேண்டும்.
இலங்கை பகுத்தறிவு மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அரசியலுக்கு தகுதியானது என்பதை நினைவுபடுத்துகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.