யூடியூப் நிறுவனத்தின் அதிரடி ; முடக்கப்பட்ட பாரிய யூடியூப் தளங்கள்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமானவை என நம்ப வைத்த 2 பாரிய யூடியூப் தளங்களை யூடியூப் நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.
இந்தியாவைத் தளமாகக் கொண்ட 'ஸ்கிரீன் கல்ச்சர்' (Screen Culture) மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'கே.எச் ஸ்டுடியோ' (KH Studio) ஆகிய 2 யூடியூப் தளங்களுமே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

AI காட்சிகள்
குறித்த 2 யூடியூப் தளங்களும் இணைந்து சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும் (Subscribers), ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் கொண்டிருந்தன.
இந்த யூடியூப் தளங்கள் ஏற்கனவே வெளிவந்த திரைப்படங்களின் காட்சிகளுடன், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி காட்சிகளை இணைத்து புதிய திரைப்படங்களின் ட்ரெய்லர்கள் போல வெளியிட்டன.
இதனைப் பார்த்த பல ரசிகர்கள், இவை ஹொலிவுட் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் என நம்பி ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இந்த காணொளிகள் "ரசிகர்களால் உருவாக்கப்பட்டது" என்ற குறிப்பு இருந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த எச்சரிக்கை வாசகங்களை நீக்கிவிட்டு, இவை உண்மையானவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஹொலிவுட் நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதும், தவறான தகவல்களைப் பரப்பியதும்குறித்த யூடியூப் தளங்கள் முடக்கப்படக் காரணமாகும்.
யூடியூப் நிறுவனத்தின் கொள்கைகளை இந்த யூடியூப் தளங்கள் கடுமையாக மீறியுள்ளதாக யூடியூப் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் AI-ஆல் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், யூடியூப் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஏனைய படைப்பாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.