மோட்டார் வாகனத்தில் சென்ற இளைஞர் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) அதிகாலை கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலீட்டுச் சபை (BOI) சமிக்ஞை விளக்குச் சந்திக்கு அருகில், நீர்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
இதன்போது, குறித்த பொருட்களை மோட்டார் வாகனம் ஒன்றில் கடத்திக்கொண்டிருந்த சந்தேகநபர், வாகனத்துடன் கைது செய்யப்பட்டு விமான நிலையப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெரியமுல்லைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபரும் சான்றுப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையப் பொலிஸாரினால் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.