தனது உயிரைப் பணயம் வைத்து 80 பேரைக் காப்பாற்றிய 20 வயது இளம்பெண்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 80 பேரைக் காப்பாற்ற உதவிய 20 வயது இளம்பெண்ணின் துணிச்சல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி – சின்ச்வாட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக் கட்டடமொன்றில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த கட்டடத்தில் சுமார் 80 பேர் உறங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ வேகமாகப் பரவியதுடன், கட்டடம் முழுவதும் புகை சூழ்ந்ததால் அங்கிருந்தவர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டனர்.

இதன்போது, குறித்த குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதான ஆர்யா காம்ப்ளே என்பவரும் தனது வீட்டிற்குள் சிக்கிக்கொண்டார். தீ மற்றும் புகை காரணமாக வீட்டின் கதவைத் திறந்து வெளியேற முடியாத நிலையில், வேறு வழியின்றி முதல் மாடியிலுள்ள பால்கனியில் இருந்து சுமார் 12 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், காயமடைந்த நிலையிலும் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அவர் நின்றுவிடவில்லை.
குடியிருப்புக் கட்டடத்தில் இருந்த ஏனையவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் வழங்கிய அவர், குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த ஏனையவர்களையும் எழுப்பி எச்சரித்துள்ளார்.
தீயும் புகையும் வேகமாகப் பரவுவதால், உடனடியாகக் கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்யா காம்ப்ளேயின் இந்தத் துரிதமான செயற்பாடு காரணமாக, அங்கிருந்த பலருக்கும் ஆபத்து குறித்து உரிய நேரத்தில் தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. தனது காலில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்ட ஆர்யாவின் துணிச்சல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீ விபத்து போன்ற ஆபத்தான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல் உடனடியாகச் செயற்பட்டு, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் வழங்கியதுடன், ஏனைய குடியிருப்பாளர்களையும் எச்சரித்த அவரது மனிதநேயச் செயல் பாராட்டுக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.