நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி; பெரும் பிரயத்தனத்தின் பின் மீட்பு
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார்.
நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்த யுவதி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் இளம் பெண் வீழ்ந்துள்ளார்.
நீர்த்தேக்கத்தில் விழுந்த யுவதி தத்தளித்ததைக் கண்ட மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை காப்பாற்றிய நிலையில், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்த்தேக்கத்துக்கு ஓரமாக சென்று கொண்டிருந்த போதே, குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது..