நள்ளிரவில் உயிரிழந்த இளம்பெண் ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஹபராதுவ, கொக்வத்தை பகுதியில் அண்மையில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட 25 வயதான ஆடைத்தொழிற்சாலை ஊழியரின் மரணம், நேரடி மின்னல் தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த பிரேதப் பரிசோதனை கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், திடீர் மரண விசாரணை அதிகாரி கமல் காமினி திலக்க முன்னிலையில் நடத்தப்பட்டது.
மின்னல் தாக்கல்
விசாரணையை மேற்கொண்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரி சித்ராணி வீரசிங்க வழங்கிய அறிக்கையில், மழுங்கிய பொருள் தலையில் பட்டதில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களே இளம்பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 3ஆம் திகதி அதிகாலை ஹபராதுவ, கொக்வத்தை பகுதியில் இடம்பெற்றது.
இதில் பஸ்கொட, ரொட்டும்பை பகுதியைச் சேர்ந்த, கொக்கலை முதலீட்டு வலயத்தில் பணியாற்றி வந்த சேனாநாயக்க சேதிகல்லகே இமாஷா மதுபாஷினி ஹிதவங்ச (25) உயிரிழந்தார்.
மரண விசாரணையின் போது உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை வழங்கிய சாட்சியத்தில், தனது மகள் ஒன்றரை ஆண்டுகளாக கொக்கலை பகுதியில் பணியாற்றி வந்ததுடன், ஹபராதுவில் வாடகை அறையில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்னல் தாக்கியதாக தகவல் கிடைத்தபோது அங்கு சென்றபோது மகள் உயிரிழந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இச்சம்பவத்தின் போது இளம்பெண்ணுடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண் காயமடைந்து கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் பூரண குணமடைந்த பின் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.