தமிழர் பகுதியில் இளைஞன் செய்து வந்த தகாத செயல் ; இலக்கு வைக்கப்படும் சுற்றுலா பயணிகள்
பொத்துவில், உல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிக்கு வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர், உளவுத் துறையினரின் உதவியுடன் பொத்துவில் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
உல்ல, பதலசேனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசியத் தகவல்
இப்பகுதியில் தொடர்ச்சியாகச் சுற்றுலாப் பயணிகளுக்குப் போதைப்பொருள் விற்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, அதன்படி, உளவுத் தூதுவர் ஒருவர் மூலம் கஞ்சா வாங்குவது போன்று செயற்பட்டதில் குறித்த நபர் கஞ்சாவுடன் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து தலா 5 கிராம் எடைக் கொண்ட மூன்று கஞ்சா பொட்டலங்களும், கஞ்சா விற்பனை மூலம் பெறப்பட்ட 49,500 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பிரேமதிலகவின் வழிகாட்டலின் கீழ், பொலிஸ் குழுவினர் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் பொலிஸாரால் தெரிவித்தனர்.