முச்சக்கரவண்டியில் சென்ற இளம் தம்பதியரின் தவறான செயல் ; வாடகை வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸார் நடத்திய சோதனையின் போது, சந்தேகநபர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
சந்தேகநபர்களான தம்பதியரிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் வருவதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை மறித்து பரிசோதித்த போது, அதன் பின் இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த போது, அவர் பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவருடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் காரணமாக அவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்த போது, அதற்குள் இருந்து பெருந்தொகை பணம் கண்டெடுக்கப்பட்டது.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கணவன்-மனைவி எனத் தெரியவந்ததுடன், பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 1,50,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களான தம்பதியர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை - ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், அந்த வீட்டைப் பரிசோதித்த போது பணத்தை எண்ணப் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 மற்றும் 34 வயதுடைய இத் தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.