யோஷித ராஜபக்சவுக்கு 51 இலட்சம் ரூபாய் சம்பளமாம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் வேதனமாக 5,150,626 ரூபாய் பெற்றுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சாட்சியமளித்த கடற்படை அதிகாரி, குறித்த தொகையானது வேதனமாக வழங்கப்பட்ட பணம் எனவும், அதில் ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணையின்போதே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.