51 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைபொருள்; விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 51 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படும் தாய்லாந்து நாட்டவர்கள் மூவர் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள் 22, 22 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், தொழில் ரீதியாக வாகன ஓட்டுநர்களாகப் பணியாற்றுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TG 307 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவர்களின் மூன்று பயணப் பைகளைச் சோதனையிட்டபோது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 5 கிலோகிராம் 96 கிராம் எடையுள்ள ஹஷிஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.