இரவு வேளைகளில் பெண்களிடம் கைவரிசையை காட்டிய கோடீஸ்வர வர்த்தகரின் மகன்
பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று கூறப்படுகிறது.
இரவு வேளைகளில் கைவரிசை
சந்தேகநபர்களிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி, 5 நவீன கையடக்க தொலைபேசிகள், 15 ஸ்மார்ட் தொலைபேசிகளும், 10,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பெண் கைப்பை மற்றும் இரண்டு பெரிய பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததால் அவர்களை துரத்திச் சென்று, பாதையை தடுத்து பொலிஸார் சோதனையிட்டனர். அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.
பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரளை, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைதான 25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.