நவராத்திரியின் 8ஆம் நாள் வழிபாட்டு முறை
நவராத்திரியின் எட்டாம் நாள் என்பது சரஸ்வதி தேவியை வழிபடக் கூடிய இரண்டாம் நாளாகும். அஷ்டமி திதியில் வரும் இந்த நாள் துர்கை வழிபாட்டிற்குரிய மிகவும் சிறப்பு மிகுந்த நாளாகவும், மிகவும் சக்தி நிறைந்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் அம்பிகையின் ஆற்றல் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரியின் எட்டாம் நாள் அக்டோபர் 18ம் திகதியன்று வருகிறது. ஐப்பசி மாத பிறப்பு, ஞாயிற்றுக்கிழமை, நவராத்திரியின் எட்டாம் நாள், உத்திராடம் நட்சத்திரத்துடன் இணைந்த என பல சிறப்புகளை ஒன்றாக சேர்ந்துள்ள, ஆன்மீக சிறப்புமிக்க நாளாகும். இந்த நாளுக்குரிய சிறப்பு என்ன, இந்த நாளில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி 2026 எட்டாம் நாள் சிறப்புகள்
துர்காஷ்டமி - மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படும் நவராத்திரியின் எட்டாம் நாளில் அம்பிகை, ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்ய புறப்பட்ட நாளாகவும், அசுர வதம் முடிந்த பின் சாந்த சொரூபியாக நின்ற நாளாகவும் இது கருதப்படுகிறது.
இந்த நாளில் அம்பிகையை மகா கௌரி வடிவிலும், தென்னாட்டு மரபுகளில் நரசிம்ம தாரிணி (நரசிம்மி) வடிவிலும் வழிபடுகிறோம். எதிரிகள் தொல்லை நீங்கவும், பயம் மறைந்து தீராத வினைகள் தீரவும் இந்த அஷ்டமி வழிபாடு மிகச் சிறந்தது.

ஞாயிற்றுக்கிழமையில் வரும் உத்திராடம் நட்சத்திரம் - ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய நாள். அதேபோல, உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதியும் சூரிய பகவானே ஆவார்
சூரியனின் நாளும், அவரது நட்சத்திரமும் இணைந்து வரும் வேளையில், ஐப்பசி மாதப்பிறப்பாக (சூரிய பெயர்ச்சி நாள்) அமைவது சூரிய பகவானின் அருளைப் பூரணமாகப் பெற உதவும்.
ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள், கண் திருஷ்டி அல்லது பிணிகளால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் வழிபட்டால் நலம் பெறலாம். மேலும், உத்திராடம் என்பது "வெற்றியைத் தரும் நட்சத்திரம்" என்று ஆன்மீகத்தில் போற்றப்படுகிறது.

8-ம் நாள் வழிபாட்டு விவரங்கள்
வழிபடும் தெய்வம்: மகா அஷ்டமி நாளில் அன்னை துர்க்கை / மகா கௌரி (அல்லது மரபுப்படி சரஸ்வதி தேவி வழிபாடு)
அம்பிகை திருநாமம்: நரசிம்ம தாரிணி / மகா கௌரி
கோலம்: பத்ம வகைக் கோலம்
மலர் : ரோஜா / வெண்தாமரை
இலை: மருதாணி
நைவேத்தியம்: பால் சாதம்
சுண்டல்: மொச்சைப் பயறு சுண்டல்
பழம்: திராட்சை பழம்
ராகம்: புன்னாகவராளி
