குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தில் புழுக்கள்
இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது.
அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு வைத்தியசாலையில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்டது.
இந்த மருந்து பாட்டிலில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அந்த பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளித்தார்.
இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும். அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கினர்.
அந்த பெண்ணிடம் இருந்து மருந்து பாட்டிலை கைப்பற்றிய அவர்கள், அதன் மாதிரிகளை போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக்கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த ஆஸ்பத்திரியில் 306 பாட்டில்களில் இருந்த மேற்படி மருந்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் சில பாட்டில்களில் இருந்தும் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றில் பூச்சி, புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கோல்ட்ரிப் இருமல் மருந்து ஏற்படுத்திய உயிரிழப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்த விவகாரம் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.