கிளிநொச்சி உணவகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (10) அன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றத்தினால் பரந்தன் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஐந்து பலசரக்கு கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நான்கு உணவகங்கள் இரண்டு வெதுப்பகங்களிற்கு 360000 தண்டப்பணம் விதித்ததுடன் 2 உணவகங்கள், 1 வெதுப்பகம் என்பன குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் கண்டவளை பகுதியில் இரண்டு பலசரக்குகடைகளுக்கு 35000 தண்டப்பணமும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 1 பலசரக்கு கடைக்கு 10000 தண்டப்பணமும் 2 உணவகங்களுக்கு 125000 தண்டப்பணம் விதித்ததுடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக உணவகங்களை மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.