உலகின் விந்தை மிகுந்த மிக ஆடம்பரமான சிறைகள் ; குதிரை சவாரி முதல் சன் பாத் வரை...
சிறைச்சாலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கம்பி எண்ணுவது, களி போன்ற சுவை இல்லாத உணவுகள், இருண்ட, நெருக்கமான அறைகள், சுதந்திரமற்ற வாழ்க்கை போன்றவைதான். ஆனால், உலகில் சில சிறைகள் நமது இந்த கண்ணோட்டத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
ஆடம்பரமான சிறைகள்
அங்கு கைதிகள் ஹோட்டல்களுக்கு இணையான, சில சமயம் அதைவிடவும் சிறந்த வசதிகளை அனுபவிக்கிறார்கள். அத்தகைய ஹோட்டலை மிஞ்சும் வசதிகளைக் கொண்ட உலகின் மிகவும் ஆடம்பரமான சில சிறைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்டோய் சிறை - நார்வே: ஆடம்பர சிறைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது நார்வேயில் உள்ள பாஸ்டோய் சிறை. இங்கு கைதிகள் மீன்பிடித்தல், குதிரை சவாரி, டென்னிஸ் விளையாடுதல் போன்ற வசதிகளை அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத வகையில், அவர்கள் சன் பாத் எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது சிறை என்று மறந்துபோகும் அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரமான சூழல் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
எச்எம்பி அடிவெல் சிறை, ஸ்காட்லாந்து: வசதியான படுக்கைகள், திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் என கைதிகள் சிறையில் இருந்தபடியே புதிய திறன்களை கற்றுக்கொண்டு, விடுதலைக்கு பிறகு வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
ஒட்டாங்கோ, நியூசிலாந்து: பால் பண்ணை வேலை, பல்வேறு விதமான செயல்பாடுகள், அழகான மெஸ் ஹால் என கைதிகள் உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஈடுபட்டு, சுத்தமான மற்றும் அழகான உணவகத்தில் உணவு உண்கின்றனர்.
இந்தோனேசியாவின் பெண்கள் சொகுசு சிறை: ஏர் கண்டிஷனிங், குளிர்சாதனப் பெட்டி, கரோக்கி, நெயில் சலூன் என பல்வேறு வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஒவ்வொன்றிற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்டன் டேல் சிறை, சுவிட்சர்லாந்து: ஒவ்வொரு கைதிக்கும் இங்கு தனிப்பட்ட அறை வழங்கப்படுகிறது. மேலும், விடுதலையாவதற்கு முன்பாக, அவர்கள் தேர்ந்தெடுத்த பட்டப்படிப்பை நிறைவு செய்வதும் கட்டாயம் ஆகும்.
மேற்குறிப்பிட்ட இவை அனைத்துமே சாதாரண சிறைகள் மட்டுமல்ல, சில நேரங்களில், வெளியில் கிடைக்காத வாய்ப்புகளையும் இவை கைதிகளுக்கு வழங்குகின்றன. இவ்வாறாக, இந்த சிறைகள் தண்டனையை மட்டுமே அல்லாது, கைதிகளின் மறுசீரமைப்பையும், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டையும் முக்கியமாகக் கருதி, ஆடம்பர வசதிகளுடன் புதிய வாழ்க்கைக்கு அவர்களை தயார்படுத்தும் இடங்களாக செயல்படுகின்றன.