இலங்கையின் உணவு நிலைமை குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் நேரடித் தாக்கங்கள் காரணமாக, இலங்கையில் மேலும் பல மில்லியன் மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம்
உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு அறிக்கையின்படி, இந்த நெருக்கடியின் விளைவாக சில சந்தர்ப்பங்களில் மக்கள் கடுமையான பட்டினி நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடியின் பக்கவிளைவுகளால் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடுமையான பட்டினி நிலைக்கு தள்ளப்படக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.
குறித்த பட்டியலில், ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், சோமாலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியில் மேலும் 45 மில்லியன் மக்கள் வரை இவ்வாறான உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஆபத்தில் உள்ளதாக உலக உணவுத் திட்டம் மேலும் குறிப்பிட்டுள்ளது.