உயிர்த்த ஞாயிறு வழக்குகள் விசாரணைக்கு ; விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் சி 76 எனும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளன.

இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று அறிவுறுத்தல் வழங்கினார்.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் நீதிமன்றங்களை ஸ்தாபிக்கும் பணிகளை இன்று (12) நேரில் சென்று அவதானித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேபோல், நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்காகப் பொறுப்பேற்கப்பட்டுள்ள ஏனைய முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களிலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயல்படுத்துவதற்கும், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும் நான்கு முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன.