இலங்கையின் பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்
டித்வா' அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

பால் உற்பத்தி
இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் கட்டப் பணிகளும் வெற்றி கரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை கள அளவில் விரைவாகச் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விலங்கு தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரம், உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துதல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்துவதும், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.