இலங்கையின் நிதித்துறை மேம்பாட்டிற்காக உலக வங்கி 150 டொலர் நிதியுதவி
இலங்கையின் நிதித்துறை மேம்படுத்தல் செயற்திட்டத்துக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை (10.11.2023) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கை
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது நாட்டின் நிதியியல் துறைக்கு ஆதரவளிக்கக்கூடிய வலுவான பாதுகாப்புத்திட்டங்களின் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரம், வணிகங்கள், சிறிய முயற்சியாளர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் ஸ்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான வங்கித்துறை இன்றியமையாததாகும்.
காப்புறுதிவைப்புத் திட்டம்
அதேபோன்று காப்புறுதிவைப்புத் திட்டத்தை வலுப்படுத்துவதானது பெண்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்போர் உள்ளடங்கலாக சிறிய தொகை வைப்பாளர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கு உதவும்.
அதுமாத்திரமன்றி நாட்டின் நிதியியல் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பங்களிப்புச்செய்யும் என்பதுடன், அது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு மிகவும் அவசியமாகும்.
அதேபோன்று நுண்பாகக் கடன்நெருக்கடியின்போது நிதியியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நிதியியல் துறை பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும்.
அத்தோடு விரிவுபடுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சீரான செயற்திட்டத்துடன்கூடிய புதுப்பிக்கப்பட்ட காப்புறுதிவைப்புத் திட்டமானது நிதியியல் துறை மீதான மக்களின் நம்பிக்கையையும், மக்களின் சேமிப்பையும் பாதுகாப்பதற்கு வழிவகுக்கும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.