ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் அத்துமீறிய ஊழியர்கள் ; சமூக வலைத்தளத்தில் வைரல்
இந்தியா ஜெய்ப்பூரிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் ஒன்றில், விருந்தினர்கள் தங்கியிருந்த அறைக்குள் ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் நிபுணரான ஒருவர் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூரிலுள்ள 'ஹயாட்' (Hyatt) விருந்தகத்தில் தங்கியிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில், ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்ட இவர்களது அறைக்குள், இரண்டு விருந்தக ஊழியர்கள் 'மாஸ்டர் கீ' (Master key) மூலம் அனுமதியின்றி நுழைந்துள்ளனர்.

அச்சமயம் அறைக்குள் நுழைந்த குறித்த நபரின் 6 வயது மருமகள், அடையாளம் தெரியாத இருவர் அறைக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அழுதுகொண்டே வெளியே ஓடிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊழியர்கள் எவ்வித அடையாள அட்டையும் அணிந்திருக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தனது சமூக வலைத்தளத்தில் சாடியுள்ளார்.
"ஒருவேளை அறைக்குள் யாராவது ஆடை மாற்றிக்கொண்டிருந்தாலோ அல்லது குளித்துக்கொண்டிருந்தாலோ நிலைமை என்னவாகியிருக்கும்? எனது மருமகள் தனியாக இருந்திருந்தால் அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால் யார் பொறுப்பு?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விருந்தகத்தின் பொது மேலாளரிடம் முறையிட்டபோது, "அவர்கள் உள்ளே நுழைந்தால் என்ன?" என அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், சிசிடிவி காட்சிகளைத் தர மறுத்துவிட்டதாகவும் ஜான்வி குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, விருந்தக நிர்வாகத்தின் இத்தகைய பொறுப்பற்ற பதிலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல பயனர்கள் தமக்கும் இவ்வாறான அனுபவங்கள் ஏனைய விருந்தகங்களில் ஏற்பட்டுள்ளதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் குறிப்பிடுகையில், பொதுவாக மாலை வேளைகளில் செய்வதற்கு ஊழியர்கள் வருவது வழக்கம் என்றாலும், முன்னறிவிப்பின்றி நுழைவது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, ஹயாட் விருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஹோப்லமாசியனின் (Mark Hoplamazian) குழுவினர் ஜான்வியைத் தொடர்புகொண்டுள்ளனர்.
இது குறித்து 72 மணித்தியாலங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி அறிவிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.