வேலணை பிரதேச சபையில் மழையில் நனைந்தபடி பெண் ஆர்ப்பாட்டம்; நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கி பசுவை, பிரதேச சபையினர் பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று (9) ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வேலணை நகர்ப் பகுதியில் பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்கள் பசுமாட்டினை பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
பசு மாட்டை கட்டிவைத்த ஊழியர்கள்
அந்த பசுவை உரிமையாளர் தேடி வரும் வரை சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் பசுமாடு இருப்பதை அறிந்து, பசுவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு மாடுகளின் நலன் கருதி, அவற்றை அவிழ்த்துவிட்டதாகவும் அவ்வாறான நிலையில், பசு பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்ற காரணத்துக்காக பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.
பசு மாட்டை தண்டப் பணம் அறவிடாமல் விடுவிக்க வேண்டும் என ம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் செயலர் கூறுகையில், எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வீதியில் உறங்கும் மாடுகள்
அவற்றினை கட்டி வளர்க்கவேண்டியது உரிமையாளர் ஒவ்வொருவரதும் பொறுப்பு. குறிப்பாக, வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
அது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. இவ்வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன.
எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள், சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் அல்லது சபைக்குள் நுழைந்தால், அவற்றை பிடிப்பதற்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு என்றார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பல முறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியுள்ளார்.
எனவே, வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்த்து விடுவது பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார்.
மேலும் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம், பசுமாடு சபையினுள் நுழைந்ததற்கான தண்டப்பணமாக 5,600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.