யூடியூப் பார்த்து உடல் எடையைக் குறைக்க நினைத்த 19 வயது மாணவிக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19) மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூபில் வெளியான சில வீடியோக்களை கலையரசி தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றிற்கு சென்று, யூடியூபில் பார்த்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சில மருந்துப் பொருட்களை வாங்கியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற கலையரசி, அந்த நாட்டு மருந்தை உட்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், அதே இரவு கலையரசிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கலையரசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, கலையரசியின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “யூடியூப் வீடியோக்களை பார்த்து மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்துகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
கலையரசி எந்த வகையான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
முறையான விசாரணை இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.