தகாத புகைப்படங்களை வெளியிடுவேன்; முதலாளியான பெண்ணிற்கு இளைஞர் மிரட்டல்!
வர்த்தக பெண் ஒருவரின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விடுவதாக கூறி 25 இலட்சம் ரூபாய் கப்பம் பெற்ற சந்தேக நபர் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர் ,பாதிக்கப்பட்ட வர்த்தக பெண்ணின் வீட்டில் வேலை செய்த நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார்.
3 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல்
கொழும்பு 7 , மலலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண் ஒருவரின் வீடொன்றில் பணியாளராக சேவையாற்றிய இவருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸார் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரைக்கு உட்பட்ட காலப்பகுதிக்கு இடையில் பெண்ணை அச்சுறுத்தி 25 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அச்சுறுத்தி கப்பம் பெற்றமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.