வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை
களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.