பொலிஸாரிடம் சீன் காட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (1) உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு
பெண் காரை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
இதன்போது பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
அதன்போது தாம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி என கூறிய நிலையில், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.