புதையலுக்கு ஆசைப்பட்டு 2.2 மில்லியன் ரூபாய் தங்க நகைகளை இழந்த பெண்
புத்தளம் - ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நகைகளை திருடிய பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில் வசிக்கும் 67 வயது கணவர், 48 வயது மனைவி மற்றும் அவர்களின் 22 வயது மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தந்தை, தாய், மகள் கைது
சுமார் 10 ஆண்டுகளாக டுபாயில் பணிபுரிந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே ஏமாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் அந்த பெண்ணின் பல்லமவின் கம்மனதலுவ பகுதியில் உள்ள மற்றொரு காணியில் வாடகைக்கு வசித்து வந்த ஒரே குடும்பமே பெண்ணை ஏமாற்றியுள்ளனர்.
வீட்டிற்குப் பாதுகாப்பு பூஜை செய்வதாக கூறி, அந்தப் பெண்ணிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் சுமார் 500,000 ரூபாயைப் பெற்றுள்ளனர்.
அந்த காணியில் புதையல் இருப்பதாகவும், அதை மீட்டெடுக்க முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். புதையலை மீட்டெடுப்பதற்கு முன்பு, பெண்ணின் அனைத்து தங்க நகைகளையும் புதைக்க வேண்டும் என்றும், இது அவரது முன்னிலையில் செய்யப்படும் என்றும் தாயான பெண் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதயடுத்து அ பெண் டுபாயில் தனது வேலை செய்து வாங்கிய சுமார் 9 பவுண் கொண்ட தங்க நெக்லஸ், 2 பதக்கங்கள் மற்றும் 2 தங்க வளையல்களை வெள்ளைத் துணியில் சுற்றி அவர்களுக்குக் கொடுத்துள்ளார்.
சந்தேக நபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தங்க நகைகளை அந்தப் பெண்ணின் முன் புதைத்தனர். தங்க நகைகளை புதைத்த பிறகு பெண் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம், வீட்டிற்குச் சென்று, சுத்தமான தண்ணீரில் மஞ்சள் நீரை தயாரித்து கொண்டு வருமாறு கூறி, சந்தேகநபரான பெண் அனுப்பி வைத்துள்ளார்.
புதைக்கப்பட்டிருந்தது தங்க நகைகளை அல்ல
பெண் அதைத் தயாரித்து கொண்டு வந்த பிறகு, அதை அந்த இடம் முழுவதும் தெளித்து சடங்குகளைச் செய்துள்ளார். அந்த இடத்தில் ஒரு பூதம் இருப்பதாகவும், அது அனுப்பப்படும் வரை புதைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்கக் கூடாது என்றும் கூறி அவர்கள் வெளியேறியுள்ளனர்
அதன் பின்னர் , வீட்டின் உரிமையாளர் பெண் புதைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க பெண் சந்தேக நபருக்கு பல முறை அழைப்பு விடுத்த போதும், அவரால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
சந்தேகமடைந்த பெண் அந்த இடத்தைத் தோண்டி தங்க நகைகளை மீட்க பெண் முயன்ற போது, அங்கு புதைக்கப்பட்டிருந்தது தங்க நகைகளை அல்ல என்பதையும், தாயத்து உள்ளிட்டவையே அங்கு புதைக்கப்பட்டிருந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், பல்லம பொலிஸில் சம்பவம் குறித்து முறைப்பாடி அளித்ததற்கமைய சந்தேக நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.