குளிரில் சிக்கிய குடும்பத்துக்கு உதவ முன்வந்த கனேடியர்: கிடைத்த மறக்கமுடியாத அனுபவம்
கடந்த வார இறுதியில், தன் வீட்டின் ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்துள்ளார் ஒரு கனேடியர். அன்றைய நாள் அவருக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது.
ஒன்ராறியோவில் வாழும் Denny Vervaet, தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்காக இரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கும்போது, யாரோ அவர் வீட்டு ஜன்னலைத் தட்டியுள்ளார்கள்.
Denny கதவைத் திறக்க, அங்கேஒரு பெண் குளிரில் நடுநடுங்கியபடி நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரை உள்ளே வரும்படி Denny அழைக்க, அந்தப் பெண்ணோ, தனது குடும்பம் பயணித்த கார் ஒரு பள்ளத்தில் சிக்கிக்கொண்டதாகவும் மற்றவர்கள் காருக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது கனடாவில் பயங்கர புயல் வீசிக்கொண்டிருந்திருக்கிறது.
உடனே, Dennyயும் அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரை அழைத்துவருவதற்காக சென்றுள்ளார்கள். அங்கே பார்த்தால், மேலும் இரண்டு கார்கள் பள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்திருக்கின்றன.
உடனே, அனைவரையும் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார் Denny. எல்லோருமாக Dennyயுடன் புறப்பட, அன்று இரவு அவர்கள் வீட்டில் 10 விருந்தினர்கள் தங்கியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் சேர்ந்து விளையாட, பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்து தேநீர் சாப்பிட்டபடி உரையாட, இரவு கடந்து சென்றிருக்கிறது.
மறுநாள், Dennyயின் மாமனார் தனது ட்ராக்டரைக் கொண்டு வந்து பள்ளத்தில் சிக்கியிருந்த கார்களை மீட்க, விருந்தினர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றுள்ளார்கள்.
தனக்கு புதிய நண்பர்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களுடனான நட்பு தொடரும் என்றும் உற்சாகத்துடன் கூறுகிறார் Denny.