உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜெனீவாவில் குரல் எழுப்பிய இலங்கையர்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கோரி இலங்கையர் ஒருவரால் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு ஷங்க்ரி-லா விருந்தகத்தில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட விருந்தக ஊழியரான 20 வயதுடைய விஹங்க தேஜந்த என்பவரின் தந்தையான சுராஜ் நிலங்கவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தொண்டு நிறுவனங்களின் சார்பாகப் உரையாற்றிய சுராஜ் நிலங்க, தாக்குதல் நடத்தியவர்களுக்கு அப்பால் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பேரழிவுகரமான குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பான அனைவருக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், முழுமையான, சுயாதீனமான மற்றும் விரைவான குற்றவியல் விசாரணையையும் கோரினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற போதிலும், பொறுப்புக்கூறலுக்கான நம்பிக்கைகள் மங்கி வருவதாகவும், மூளையாக செயற்பட்டவர்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தொடர்ச்சியான விசாரணைகள் “கடுமையான குறைபாடுகளால்” சிதைக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
தாக்குதல்கள் குறித்த முன் எச்சரிக்கைகளை புறக்கணித்து, போதுமான பாதுகாப்பை செயல்படுத்தத் தவறியதற்காகவும், வழிபாட்டாளர்களையும் விருந்தினர்களையும் கொடிய குண்டுவெடிப்புகளுக்கு ஆளாக்கியதற்காகவும் சுராஜ் நிலங்க அதிகாரிகளைக் கண்டித்தார்.
பொருளாதார, சமூக மற்றும் உளவியல் ஆதரவு உட்பட விரிவான இழப்பீடுகளை கோரிய அவர், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நீதியை வழங்குவதற்கும் சர்வதேச வழிமுறைகளுடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவரல்லாத சிலரில் பௌத்தரான தனது மகன் விஹங்கவும் அடங்குவதாக தெரிவித்த அவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை என்பதையும், உலக அரங்கில் நீதிக்கான கோரிக்கை வலுபெறுகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.