முச்சக்கரவண்டிக்குள் மகனின் கண் முன்னே கொல்லப்பட்ட குடும்பப்பெண் ; இரு இளைஞர்கள் கைது
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாரவில பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பங்கதெனிய மற்றும் பல்லம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவர்.
துப்பாக்கிச் சூடு
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாரவில , நாத்தாண்டிய பிரதேசத்திற்கு ஜூலை 22 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவி செய்த இரண்டு சந்தேக நபர்கள் புத்தளம் - மாதம்பே பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மாதம்பே பிரதேசத்தில் உள்ள கழிவுநீர் குழியிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.